இணைந்து செயலாற்றுதல்

Collaboration

ஓர் வேலைத்தளத்தினுள் நீங்கள் புதிதாக இணைந்து ஏனையவர்களுடன் இணைந்து செயலாற்றுவதை எண்ணி வியப்படைகிறீர்களா? அல்லது ஏனையவர்களுடன் சிறந்த முறையில் செயல்படுவதற்கான வழிவகைகளை தேடுகிறீர்களா? உங்களுடைய உற்பத்தி திறனையும் செயற்திறனையும் உங்களுடைய அலுவலகத்தில் அதிகரிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? அவ்வாறாயின் இணைந்து செயல்படுவதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே சிந்தித்துள்ளீர்கள்.

 

இணைந்து செயலாற்றுதல் என்றால் என்ன?

உங்களுக்காக அல்லது உங்களுடைய குழுவுக்காக நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைவதற்கு மற்றோரு நபர் அல்லது ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது ஓர் கலையாகும். இணைந்து செயலாற்றுவதென்பது ஏனையவர்களுடன் ஒத்துழைப்பதாகும். மேலும் இணைந்து செயலாற்றுவது என்பதானது ஓர் நம்பிக்கையை கட்டியெழுப்புவதையும் உள்ளடக்குகின்றது. உங்கள் மீது நம்பிக்கையற்றுப் போனால் எவரும் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்ப மாட்டார்கள். உங்களுடைய குழு உறுப்பினர்கள் உங்களை விரும்பத்தக்கவராகவும் முக்கியமான, நம்பகத்தன்மை உடையவராகவும் கருதும் போதே அவர்கள் உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை விரும்புவர். மேலும் உங்கள் குழு மிகவும் திறமையானதாகவும் சிறந்த பலனளிக்கக் கூடியதாகவும் இருக்கும். ஒரு குழு நன்கு ஒன்றிணைந்து கட்டமைக்கப்பட்டிருந்தால் மாத்திரமே அவர்களால் இலக்குகளை அடைய முடியும்.

 

இணைந்து செயலாற்றுவது எவ்வாறு?

மற்றவர்களுடன் பணிபுரிவதானது  சில விஷேட திறன்களையும் செயல்முறைகளையும் உள்ளடக்கியுள்ளது. முதலில், உங்களிடம் உள்ள ஒரு  பிரச்சினைக்கு தீர்வுகாண ஏனையவர்களுடன் இணைந்து செயல்பட நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இரண்டாவதாக, குழு அங்கத்தவர்களில் சிலர், செய்யக்கூடிய வேலைக்கு மாறுபட்ட திறன்களைக் கொண்டிருப்பதையும், அவர்களின் பலவீனங்களையும் நீங்கள் இணங்காணக்கூடியவராக இருக்க வேண்டும். மூன்றாவதாக, கலந்துரையாடுவதன் மூலம் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதுடன் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

நான்கவதாக, செலுத்தவேண்டியுள்ள கொடுப்பனவுகளை கொடுங்கள். (ஒருவரிடம் ஆலோசனையை பெற்றிருந்தால் அல்லது குழுவில் அவர்களின் கடின உழைப்பின் மூலம் உங்கள் செயற்றிட்டம் வெற்றிகரமானதாக அமையும் போது). ஐந்தாவதாக, உங்களுடைய குழு உறுப்பினர்களின் சிக்கல்களுக்கு செவிசாய்த்து அதிலிருந்து வெளிவர அவர்களுக்கு உதவுங்கள்.

இறுதியானதும் முக்கியமானதுமாக, தவறுகள் நேரும் போது அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவர் மீது பழிசுமத்த முயற்சிக்க வேண்டாம். தவறு உங்களுடையது எனின், ஏற்றுகொள்ளுங்கள், குழுவிலுள்ளவர்களால் தவறு ஏற்பட்டிருப்பின், சுட்டிக்காட்டுவதிலும் குறைகூறுவதிலும் அவசரப்படாதீர்கள். தவறுகளை அங்கீகரித்து அவற்றை சரிப்படுத்த (குழுவாக) வழிகளை கையாளுங்கள்.

 

இணைந்து செயலாற்றுவதன் கூறுகள்

  • குழுவினரிடம் நீங்கள் எதிர்பார்ப்பதையும் நீங்கள் எதை நோக்கி செல்கிறீர்கள் என்பதையும் தெளிவாக விளக்கவும்.
  • ஒவ்வொரு உறுப்பினர்களினதும் திறன்களையும் (மற்றும் பலவீனங்களையும்) புரிந்து கொள்ளுங்கள், அதனூடாக அவர்கள் செய்யக்கூடிய வேலைகளை செய்ய ஊக்குவிக்க வேண்டும். சிலவற்றை தம்மால் முடியாது என அவர்கள் கருதினால், அதனை அவர்களால் செய்து முடிக்க வாய்ப்பின்றி அமையும்.
  • குழுவினர் தமது எந்தவொரு மனநிலையையும் பிரச்சினைகளையும் வெளிப்படையாக எப்போதும் உங்களுடன் பேச முடியும் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
  • தேவையான தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு பகிர்வதை தவிர்ப்பதானது தோல்விகளுக்கும் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும் என்பதால், எவரும் இதனை விரும்புவதில்லை.
  • சிந்திக்க இடம்கொடுங்கள். ஒன்று சேர்ந்து செயல்படுவதன் மூலம் சிறந்த கருத்துக்களும் எண்ணங்களும் உருவாகும்
  • எப்போதும் அனைவரினதும் ஆமோதித்தலுடன் செயல்முறைகளையும் திட்டங்களையும் செயற்படுத்துங்கள். உங்களுடைய சுயகருத்துக்களை மாத்திரம் கருத்திற் கொள்ளாது ஏனையவர்களின் கருத்துக்களையும் செவிசாய்த்து நடைமுறைச் சாத்தியமான திறனான ஓர் திட்டத்தை உருவாக்குங்கள்.
  • என்ன தவறுகள் நடக்கக்கூடும் என்பதையும், நீங்கள் எதைக் கவனிக்க வேண்டும் என்பதையும் இணங்கண்டு கொள்ளுங்கள். சிக்கல்களை அறிந்துகொள்வதானது இறுதி இலக்கை அறிவதைப் போலவே முக்கியமானதாகும்.
  • நான் எனும் அகங்காரத்தை விட்டுவிடுங்கள். குழு செயற்றிட்டம் என்பதை கருத்திற்கொண்டு, ஏனையவர்களுடன் இணைந்து சிறம்பட செயலாற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.
  • தவறுகளை மன்னித்து விடுங்கள். ஏனையவர்களின் தவறுகளுக்காக அவர்களுடன் மனக்கசப்புடன் இருக்க வேண்டாம்
  • ஒரு செயற்றிட்டத்தினை உருவாக்கும் போது காலஎல்லை, அவகாசம், வழங்கப்பட்ட பொறுப்புக்களை தெளிவாக குறிப்பிடுங்கள். எனவே, அதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதையும், எப்போது முடிக்க வேண்டும் என்பதற்கான கால எல்லையையும் , அதில் அவர்களுக்குரிய வேலையையும் குழுவிலுள்ளவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
  • நெருக்கமான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கும் கலந்துரையாடல்களை மகிழ்ச்சிகரமாக மேற்கொள்ளவும் நகைச்சுவை சார்ந்த கருத்துக்களை பயன்படுத்துங்கள். கவலைகளுடன் கூடிய ஒரு குழுவை விட மகிழ்ச்சிகரமான ஒரு குழுவினரால் திறம்பட செயற்பட முடியும்.
  • உங்களுடைய குழுவை செயற்திறன் வாய்ந்ததாகவும் புதுப்பிக்கப்பட்டதாகவும் வைத்துக்கொள்ள சில நுட்பமான வழிமுறைகளைக் கையாளுங்கள்.
  • இறுதியாக, செயற்பாடுகளை கண்காணிப்புச் செய்வதையும், முடிவுக்கால எல்லையையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், கண்காணிக்கப்படவில்லை எனின், அணியினர் அவர்களது வேலையை உரிய முறையில் சரியான முறையில் செய்யத்தவறி விடுவார்கள்.

 

அதிகளவில் பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரு நிறுவனத்தில் இணைந்து செயற்படுவது என்பது மிகவும் பெறுமதி வாய்ந்த ஒன்றாகும் . ஆனால் இது எமது அன்றாட வாழ்க்கைக்கும் பொருந்தும். எனவே எந்தவொரு சூழ்நிலையிலும் மிக அவசியமானதாகும். ஓத்துழைப்புடன் செயற்பட கற்றுக்கொள்வது குழுவில் உங்களை ஓர் சிறந்த ஆளுமைமிக்கவராக இணங்காட்ட உதவும்.

You may also like

Leave a comment