சிகரத்தை அடைய எளிய வழி எது?

Achievement

 

பிறரின் அனுபவங்களைக் கற்றுக்கொள்ள நீங்கள் அதிகம் அக்கறை காட்டுபவர் என்றால் தொடருங்கள். இங்கு உங்களால் பல விடயங்கள் அறியப்படும்.

 

அடுத்த நிலைக்குச் செல்ல விரும்பாதவர் யார்?

 

யாரும் ஒரே நிலையில் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். மேலும் உயர வேண்டும், பல தடைகளைக் கடந்து பலரும் பாராட்டும்படி நடந்து கொள்ள வேண்டும், பெரும் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

எடுத்துக்காட்டுக்கு, ஒவ்வொருத்தருக்கும் அவரவர் பணிபுரியும் வேலையில் / தொழிலில் எது உச்சமோ அதை அடைய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஒவ்வொருவரும் எதையும் விருப்பப்படலாம் ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்பது அனைவரும் அறிந்தது. அதற்குக் கடுமையான உழைப்பு தேவை.

 

ஓட்டப்பந்தயம்

 

ஒரு அலுவலகத்தில் துவக்க நிலையில் இருப்பவருக்குப் பெரிதாகப் பொறுப்புகள் இருக்காது, அலுவலகம் வந்தோமா போனோமா என்று இருக்கலாம் ஆனால், அதே அவருடைய முகாமையாளர் என்றால் அனைத்தையும் ஒழுங்காகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது.

பலரை சமாளிக்கணும், வாடிக்கையாளரிடம் பேச வேண்டும், பிரச்சினை என்றால் சமாதானப்படுத்த வேண்டும், முதலாளிக்கு பதில் கூற வேண்டும். அதே அந்நிறுவன முதலாளி என்றால், கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நிறுவனத்தைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற மிகப்பெரிய சவால் உள்ளது. பணம் கிடைக்கும் என்றாலும், அதற்கான தனிப்பட்ட இழப்புகள் அதிகம்.

இது போல ஒவ்வொரு நிலைக்கும் அதற்கான பணி, நெருக்கடிகள், கட்டுப்பாடுகள், தனிப்பட்ட வாழ்க்கை இழப்பு என்று தொடரும். எனவே, நாம் அடுத்தக் கட்டத்துக்குச் செல்லச் செல்ல அதற்கான நெருக்கடிகளும், பிரச்சனைகளும் அதிகரித்துக்கொண்டே செல்லும். உள்ளூர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெற குறைந்த முயற்சி போதும். காரணம், போட்டி குறைவு ஆனால், அதே மாகாண அளவில், மாவட்ட அளவில், தேசிய அளவில்?! அதையும் தாண்டி ஒலிம்பிக் என்றால் எவ்வளவு முயற்சி, பயிற்சி வேண்டும்!

 

எனவே, சிகரத்தை அடைவது எளிதல்ல.

 

வரலாற்றைப் படிப்பவரும் படைப்பவரும்

 

பொது வாழ்க்கைக்கு வருவதென்று முடிவெடுத்து விட்டால், அதற்கான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும், அவமானங்களையும் சந்தித்துத் தான் ஆக வேண்டும். என்ன இருந்தாலும், வரலாற்றைப் படிப்பவருக்கும், வரலாற்றைப் படைப்பவருக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்!

 

மேற்கூறியதைப் படித்தால், அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப நபர் நினைவுக்கு வருவார். உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்?

 

‘வாழ்க்கைப் பிரச்சினை அதிகமாகத் தாக்குவதாக நீங்கள் உணர்ந்தால், கடவுள் உங்கள் மீது வைத்த கண்ணை எடுக்கவில்லை என்று அர்த்தம். வாழ்க்கை என்பது உங்களை எரித்துக்கொண்டு இருக்கும் உலை அல்ல. சொலிக்கும் வெள்ளியாக உங்களை மாற்றிக்கொண்டு இருக்கும் உலை‘ என்று கூறுகிறார். எனவே, சிகரத்தை அடைவது எளிதல்ல. எளிதாக அடைந்தால் அது சிகரமல்ல. கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாமல் கிடைப்பது என்னைக்குமே நிலைக்காது.

You may also like

Leave a comment