புத்தகம் வாசிப்பதால் பயன்

Reading books

புத்தகம் வாசிப்பதால் பயன் உண்டா? என்றால் நிச்சயம் உண்டு. புத்தகம், அறிவை விசாலமாக்குகிறது, புதிய செய்திகளை, கருத்துகளைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. ஏற்கனவே நாம் கொண்டுள்ள கருத்துகளில் மாற்றம் கொண்டு வருகிறது.

 

எப்படிப்பட்ட புத்தகங்கள் படிக்கலாம்?

புத்தகங்கள் என்பது ஒவ்வொருத்தருடைய இரசனை, எண்ணங்கள் சம்பந்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்துகள், எண்ணங்கள் இருக்கும். யாராக இருந்தாலும், எப்போதுமே ஒரே மாதிரியான புத்தகங்கள் படிப்பது சோர்வை அளிக்கலாம். எனவே, பல தரப்பட்ட புத்தகங்களைப் படிப்பது நமக்குப் புதிய எண்ணங்களை, மாற்று கருத்துகளைக் கொண்டு வரலாம். எளிமையாகக் கூற வேண்டும் என்றால், இது தான் சரி என்று நாம் நினைத்து இருந்த கருத்துகள் தவறாகப் போகலாம். ‘ஓ! இப்படியும் ஒரு கோணம் உள்ளதா?‘ என்று யோசிக்க வைக்கும். புத்தகங்கள் படிக்கும் போது முடிந்தவரை முன்முடிவுடன் படிப்பதை தவிர்ப்பது நல்லது. இவை நம்மை மேம்படுத்தாது. குறிப்பிட்ட புத்தகம் என்ன சொல்ல வருகிறது என்று படிக்கும் முன்பே நமக்குத் தெரியும். எனவே, பிடிக்காத உள்ளடக்கம் என்றால், கூடுமானவரை தவிர்த்து விடுவோம். அதையும் மீறிப் படிக்கிறோம் என்றால், எதோ ஒன்று கவர்ந்து இருக்கலாம். ஒரு புத்தகத்தில் அனைத்துமே நமக்குப் பிடிக்கும் என்று கட்டாயமில்லை. எனவே, நமக்குத் தேவையான கருத்துகளை எடுத்துக்கொண்டு மற்றதைப் புறக்கணித்து விடலாம்.

 

சுய முன்னேற்றப் புத்தகங்கள்

என்ன தான் நாவல்கள், விஞ்ஞானம், இலக்கியம், ஆன்மிகம் என்று ஏராளம் இருந்தாலும், சுய முன்னேற்றப் புத்தகங்களுக்கென்று ஏராளமான வாசகர்கள் உள்ளனர். மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் இது போல ஏராளமான புத்தகங்கள் படித்து தம்மை நிறைய விதங்களில் மாற்றிக்கொண்டுள்ளார்கள். என்னுடைய எழுத்துக்களிலும் அவை உதவி புரிகின்றன. சில வருடங்களுக்கு முன்பு விஜய் தொலைகாட்சி நீயா நானா வில் புத்தகம் படிப்பதால் அனுபவம் பெற முடியுமா? அனுபவத்தால் பெற முடியுமா? என்று விவாதம் நடைபெற்றது. அனுபவத்தால் பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், புத்தகம் படிப்பதாலும் குறிப்பிடத் தக்க அளவில் பெற முடியும் என்பது உண்மை.

 

Amazon Kindle

புத்தகமாக மட்டுமே படிப்பேன் என்று பிடிவாதமாகப் பலர் உள்ளனர். ஆனால், அவர்கள் Kindle அனுபவத்தைத் தவறவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்றே கூறுவேன். Kindle படிப்பதால், ஏராளமான வசதிகள் உள்ளன. Kindle படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். எங்கு வேண்டும் என்றாலும் எளிதாக, ஏராளமான புத்தகங்களைக் கொண்டு செல்ல முடியும் என்பது இதன் ஆகச்சிறந்த பயன். பிடிவாதமாக இருப்பவர்கள் ஒரு முறை Kindle முயற்சித்துப் பாருங்கள்.

 

எனவே, புத்தகம் படியுங்கள். உங்கள் கருத்துகளை மேம்படுத்தி / சரிபடுத்திக் கொள்ளுங்கள்.

You may also like

Leave a comment